காசநோய் இல்லாத தேசம் செய்வோம்!

இன்று (மார்ச் 24-ந்தேதி) உலக காசநோய் தினம்.

Update: 2018-03-24 07:14 GMT
வ்வோரு வருடமும் காசநோய் சுமார் 1.7 மில்லியன் மனித உயிர்களைக் காவு வாங்கிவிடுகிறது. 1882-ம் ஆண்டு ராபர்ட் காக் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான நோயை, இந்த நவீன யுகத்திலும் ஒழித்துக்கட்ட முடியாததற்கு காரணம் என்ன? என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

மைக்கோ பாக்டீரியம் டியூபர் குலோசிஸ் எனும் பாக்டீரியாவால் காற்றின் வழி பரவக்கூடியது காசநோய். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர் இருமல், சளியில் ரத்தம் வெளியேறுதல், மாலை அல்லது இரவு நேரக்காய்ச்சல், உடல் எடை குறைதல், பசியின்மை போன்ற அறிகுறிகள் இருப்பின் சளிப்பரிசோதனை மூலம் இந்நோயை எளிதாக கண்டறியலாம். இது நுரையீரலையே ஒரு முனைப்போடு குறி வைக்கும் அரக்கனாக இருந்தாலும் மற்ற உறுப்புகளையும் விட்டுவைப்பதில்லை. நிணநீர் சுரப்பிகள், நுரையீரல் சவ்வு, தண்டுவடம், குடல்பகுதி, சிறுநீரகம் என சகல உறுப்புகளையும் தாக்கக்கூடியதாக இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், ஏழு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உயிர்களை இழந்திருக்கிறோம். 1993-ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட திருத்தப்பட்ட தேசிய காசநோய் திட்டம் மூலம் கூட்டுமருந்து சிகிச்சையை அறிமுகப்படுத்திய பின் காசநோய் முற்றிலுமாக குணப்படுத்தப்படுகிறது. இந்த நோய்க்கான பரிசோதனை, சிகிச்சைகள் இலவசமாகவே செய்யப்படுகின்றன. இருப்பினும், இந்நோய்க்கு மருந்து எடுக்க தொடங்கிய சில நாட்களில் சில அறிகுறிகள் குறைந்தவுடன் தன்னிச்சையாக சிகிச்சை பெறுவதை சிலர் நிறுத்தி விடுதல், மருத்துவர்களின் தவறான பரிந்துரை ஆகியவை இந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு சவாலாக இருக்கின்றன.

காச நோயாளிகள் சாதாரணமாக இருமும் போதும், தும்மும் போதும் 40 ஆயிரம் காற்று திவளைகள் வெளியேறுகின்றன. இவற்றில் ஒரு சில திவளைகள் கூட நோயை ஏற்படுத்தும். எனவே இருமும்போதும், தும்மும் போதும் துணியால் மூடிக்கொள்ள வேண்டும். உலக காச நோய் தினத்தின் இந்த வருடத்துக்கான கருத்து, ‘காச நோய் இல்லாத உலகிற்கான முன்னெடுப்புக்கு தலைவர்கள் தேவை’ என்பதே. நோயைப்பற்றி அறிந்து கொள்ளும் அனைவரும் தலைவரே. நம் பிரதமர் 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தேசம் செய்வோம் என சூளுரைத்துள்ளார். அதற்கான வழிமுறைகளையும் வகுத்துள்ளார். இந்த உறுதிமொழியை அனைவரும் ஏற்று சாதனையாக்க முயற்சி செய்வோம். 

டாக்டர் சிவராஜ், நுரையீரல் சிறப்பு நிபுணர்

மேலும் செய்திகள்