விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-03-23 23:46 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு சம்பவத்தன்று ஹாங்காங்கில் இருந்து விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர்.

அப்போது, வெளிநாட்டு பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர்.

அப்போது, அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடைகொண்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அதன் மதிப்பு ரூ.1 கோடியே 40 லட்சம் என்பது தெரியவந்தது. இந்த தங்க கடத்தலில் அவருடன் வந்த மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சகார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்தனர்.

இதில், அவர்கள் கொரிய நாட்டை சேர்ந்த யூன் யூசுங், கிம் சாங் ஹோ, லீ சாங் வா ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்