காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் குறித்து 29-ந் தேதிக்கு பிறகு முடிவு : அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து வருகிற 29-ந் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

Update: 2018-03-23 23:15 GMT
நாகர்கோவில்,

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து வருகிற 29-ந் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

நாகர்கோவிலில் நடந்த புதிய கோர்ட்டுகள் திறப்பு விழாவில் தமிழக சட்ட துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா ஆட்சி பொறுப்பில் இருந்தபோதும் சரி, இப்போது அவரது வழியில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிற அரசாக இருந்தாலும் சரி ஐகோர்ட்டினுடைய அனைத்து தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கமாகும்.

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் 223 புதிய நீதிமன்றங்களை திறப்பதற்கு ஆணையிட்டு, அதில் 150 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு இன்று செயல்பாட்டில் இருக்கிறது. மீதமுள்ள நீதிமன்றங்கள், ஐகோர்ட்டின் அனுமதியை பெற்று திறக்கப்படும்.

இன்று ஜெயலலிதா வழியில் நடைபெற்று கொண்டிருக்கிற தற்போதைய ஆட்சியில் புதிய நீதிமன்றங்கள் கட்டுவது, நீதிபதிகளுக்கான குடியிருப்புகளை கட்டுவது, புதிய நீதிமன்றங்களை திறப்பது போன்ற பல்வேறு பணிகளுக்காக கடந்த ஓராண்டில் நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1,355 கோடி ஆகும். இந்தியாவிலேயே இவ்வளவு அதிக தொகையை நீதித்துறைக்கு ஒதுக்கிய அரசு, தமிழக அரசு மட்டும்தான்.

இன்று குமரி மாவட்டத்தில் 5 கோர்ட்டுகள் திறக்கப்படுகின்றன. ஒரே நாளில் 5 நீதிமன்றங்கள் திறப்பது குமரி மாவட்டத்துக்கு சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். இப்படி புதிய நீதிமன்றங்களை திறப்பது மட்டுமல்ல, நீதிமன்றத்துக்கு தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டின் கொள்கையை ஏற்று இந்த ஓராண்டில் மட்டும் 3,400 புதிய பணியாளர்கள் நியமிப்பதற்கு ரூ.117 கோடியை வழங்கி அரசு ஆணையிட்டு, அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான பணி நடந்து வருகிறது. அதில் 1400 பணியாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் மட்டும் நியமனம் செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையில் இருக்கின்ற ஆயுள் தண்டனை கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தார். அந்த அறிவிப்பின்படி சட்ட விதிமுறைக்கு உட்பட்டு, சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆயுள் தண்டனை பெற்றிருக்கின்ற கைதிகளை விடுதலை செய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வருகிற 29-ந் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. அதற்குப்பிறகு தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

மேலும் செய்திகள்