அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தமிழக அரசு உடனடியாக யானை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-03-23 21:51 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த பெண் யானை ருக்கு திடீரென இறந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் கோவிலுக்கு சென்று யானையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாட வீதியில் உள்ள வட ஒத்தவாடை தெரு ஆஞ்சநேயர் கோவில் அருகில் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழக அரசு உடனடியாக யானை வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 23 ஆண்டுகளாக யானை ருக்கு எந்தவித பிரச்சினையும் இன்றி நல்ல முறையில் இருந்தது. மேலும் இந்த யானை தினமும் அதிகாலையில் கோவிலில் நடைபெறும் கோ பூஜை, கஜ பூஜையில் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி வந்தது.

யானை ருக்கு இழப்பு எங்களுக்கு பேரிழப்பாக உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வரும் பக்தர்களுக்கு இந்த யானையை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். யானை ருக்கு இல்லாதது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. எனவே, தமிழக அரசு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உடனடியாக யானை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்