பொள்ளாச்சி-கோவை இடையே ஓடும் சிறப்புரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும், பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை

பொள்ளாச்சி-கோவை இடையே ஓடும் சிறப்பு ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2018-03-23 22:15 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் நலச்சங்கம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

பொள்ளாச்சி-கோவை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (எண் 06084) நிரந்தரமாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ரெயில்வே துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதோடு, ரெயிலில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக செயற்குழு உறுப்பினர்கள் பல குழுக்களாக பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களுக்கு சென்று ரெயில் பயன்பாடு குறித்த துண்டு பிரசுரம் வினியோகம் செய்ய வேண்டும்.

பொள்ளாச்சி-கோவை இடையே சீசன் டிக்கெட்டை அதிகப்படுத்துதல், இணைப்பு ரெயில்களான சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சரியான நேரம் ஒதுக்க ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில் வருவதை குறிக்கும் அறிவிப்பு பலகை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது தவிர சிற்றுண்டி உணவகம் அமைத்தல், வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை போன்ற அடிப்படை வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும். மாலை நேரத்தில் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 6 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயிலை 6.20 மணிக்கு மாற்றி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை தலைவர் ராஜசேகர், செயலாளர் மோகன்ராஜ், இணை செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்