திருச்சி என்.எஸ்.பி.ரோடு உள்பட கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனர்.

Update: 2018-03-23 23:30 GMT
மலைக்கோட்டை,

திருச்சி மலைக்கோட்டை கோவிலை சுற்றி உள்ள முக்கியமான கடைவீதிகளில் நகைக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை, துணிக்கடை, வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் பர்மா பஜார் கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த பகுதியில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் மலைக்கோட்டைக்கு தாயுமானசுவாமி, உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகரை தரிசிக்க உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் அடிக்கடி இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

இந்த புகாரையடுத்து அதிகாரிகளின் உத்தரவின்பேரில் நேற்று காலை திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி கமிஷனர் மிகாவேல் ஞானதீபம் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த தரைக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மெயின்கார்டு கேட் நுழைவுவாயில் பகுதியில் இருந்து தொடங்கியது. அப்போது பொக்லைன் எந்திரம் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்கள் 2 லாரிகள் மூலம் சாலைகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர்.

என்.எஸ்.பி. ரோட்டில் மலைக்கோட்டை அருகில் சென்றபோது தரைக் கடை வியாபாரிகள் ஒருசில கடைகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டனர். இதனால் அதிகாரிகளுக்கும், தரைக்கடை வியாபாரிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒரு சிலர் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர்.

வியாபாரிகள் சிலர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து பேசி மனு கொடுத்தனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் பெரியண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் சிவபாதம், நரசிங்க மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்