விசாரணை ஆணையம் என்ற பெயரில் எங்களுக்கு எதிராக சதித்திட்டம் - டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

விசாரணை ஆணையம் என்ற பெயரில் எங்களுக்கு எதிராக சதித்திட்டம் நடப்பதாக தெரிகிறது என தஞ்சையில் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினார்.;

Update: 2018-03-23 23:30 GMT
தஞ்சாவூர்,

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரின் மனைவிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் விசாரணை ஆணையம் என்ற பெயரில் எங்களுக்கு எதிராக சதித்திட்டம் நடப்பதாக தெரிகிறது என தஞ்சையில் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவின் ஏஜெண்டுகளாக நாங்கள் இல்லை என மக்களுக்கு காட்டிக் கொள்ளவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் என்ற பெயரில் நாடகம் ஆடுகின்றனர். பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இருக்கிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு இருப்பதாக காட்டுவதற்காகவே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் ஒட்டுமொத்த உருவமாகத்தான் ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கிறோம். இந்திய துணை கண்டத்தையே திரும்பி பார்க்க வைத்த சக்தியாக அவர் திகழ்ந்தார். 69 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்ததற்காக சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டத்தை கி.வீரமணி சூட்டினார்.

அம்மா என்றால் திராவிடம், மக்கள் நலம் எல்லாம் அடங்கியுள்ளது. நாங்கள் மாபெரும் மக்கள் சக்தியாக மாறி வருவதை பிடிக்காத துரோகிகள், எதிரிகள் தான் எங்களுக்கு எதிராக பேசுகிறார்கள். நாங்கள் வளர்ந்தால் யாருக்கு பாதிப்பு வருமோ அவர்கள் தான் எங்கள் கழகத்தில் திராவிடம் இல்லை என்ற பிரச்சினையை கிளப்பி இருக்கிறார்கள்.

மறைந்த புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் படத்திறப்பு நிகழ்ச்சி தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் வருகிற 30-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ம.நடராஜனுடன் நீண்டநாள் பழக்கத்தில் இருந்து வந்த தலைவர்களை எல்லாம் அழைக்க உள்ளோம்.

தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல் தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது தான் எங்களது ஸ்லீப்பர் செல்கள் யார் என்பது தெரியவரும். அதுவரை அவர்கள் யார் என்பது தெரியாத அளவுக்கு செயல்பட்டு வருவார்கள்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் துணை செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரின் மனைவியை நியமித்து இருக்கிறார்கள். இனி எப்படி இந்த ஆணையம் நியாயமாக செயல்படும்?. பழனிசாமியின் ஆசையை இந்த ஆணையம் நிறைவேற்ற போகிறதா? விசாரணை ஆணையம் என்ற பெயரில் எங்களுக்கு எதிராக சதித்திட்டம் நடப்பதாக தெரிகிறது.

நாங்கள் ஆரம்பம் முதலே சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கூறி வருகிறோம். விசாரணை ஆணையத்தின் விசாரணை நடுநிலையாக போகிறதா? என்று பார்ப்போம். இல்லையென்றால் சி.பி.ஐ. விசாரணை கோரி கோர்ட்டில் வழக்கு தொடரலாமா? என்பது குறித்து முடிவு செய்வோம் என அவர் கூறினார்.

மேலும் செய்திகள்