முண்டந்துறை புலிகள் சரணாலயம் அருகில் கல் குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

முண்டந்துறை புலிகள் சரணாலயம் அருகில் கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.;

Update: 2018-03-23 22:45 GMT
மதுரை,

நெல்லையை சேர்ந்த சுடலைக்கண்ணு உள்ளிட்ட 3 பேர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மாவட்டத்தில் 17 இடங்களில கல் குவாரிகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை கடந்த 6-ந்தேதி கலெக்டர் வெளியிட்டுள்ளார். இதில் பணகுடி, பெருங்குடி, மன்னார்கோவில் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்டு 5 இடங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.

தென்னிந்தியாவில் புலிகள் அழிவு பட்டியலில் உள்ளன. இதனால் பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு குவாரிகள் அமைக்கக்கூடாது என்று கடந்த 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதை பின்பற்றி ஏல அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மேலும் குவாரிகள் ஏலத்தின்போது விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள், சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு குவாரி லைசென்சு வழங்க நேரடியாக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது விதி.

ஆனால் இதுதொடர்பாக உரிய நடைமுறையை கலெக்டர் பின்பற்றவில்லை. இதன்மூலம் குவாரி ஏலத்தில் கொத்தடிமைகள், சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க இயலாமல் போய்விட்டது. இது அரசியல் பின்புலத்தை கொண்ட காண்டிராக்டர்களுக்கு ஆதரவான செயல்.

எனவே இதுதொடர்பான கலெக்டரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். நெல்லை மாவட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாரி அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் ஆர்.காந்தி, சுப்பையா, சுரேஷ்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர், தொழிற்துறை செயலாளர், தலைமை வனப்பாதுகாவலர், நெல்லை கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

மேலும் செய்திகள்