கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தரமாக அமைக்க வலியுறுத்தி நடந்தது

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தரமாக அமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-23 21:30 GMT
கோவில்பட்டி,

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தரமாக அமைக்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் இளையரசனேந்தல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2–வது குடிநீர் திட்ட பணி


கோவில்பட்டியில், 2–வது குடிநீர் திட்ட பணிகள் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் இருந்து கோவில்பட்டிக்கு குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது. மேலும் கோவில்பட்டியில் கூடுதலாக 10 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில் 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி நிறைவு பெற்றது. 3 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், கோவில்பட்டி– இளையரசனேந்தல் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு தோண்டப்பட்ட 300 லோடு சரள் மண்ணை அருகில் உள்ள தனியார் இடத்தில் கொட்டி வைத்து இருந்தனர். பின்னர் அந்த சரள் மண்ணை தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

சாலைமறியல்


இதற்கிடையே, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக தோண்டிய பள்ளத்தில் கான்கிரீட் அடித்தளம் அமைத்து, தூண்கள் கட்டப்பட்டு உள்ளன. தொடர்ந்து அங்கு பள்ளத்தை நிரப்புவதற்கு சரள் மண்ணை பயன்படுத்தாமல், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்த குப்பைகளை நேற்று முன்தினம் இரவில் லாரிகளில் கொட்டி சென்றனர்.

நேற்று காலையில் இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அங்கு குப்பைகளை அகற்றி, சரள் மண்ணை நிரப்பி, தரமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். தரமற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க முயலும் ஒப்பந்தகாரர், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் இளையரசனேந்தல் சாலை ரெயில்வே சுரங்க வழிப்பாதை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த மறியலில், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்வம், அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், முன்னாள் கவுன்சிலர் நவநீதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் இடத்தில் கொட்டப்பட்ட குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றவும், அங்கு சரள் மண்ணை நிரப்பவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கோவில்பட்டியில் இருந்து இளையரசனேந்தல் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்