லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம்: தேர்தலில் ஆதாயம் பெறவே மாநில அரசு முடிவு எடுத்துள்ளது

லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில் தேர்தலில் ஆதாயம் பெறவே மாநில அரசு முடிவு எடுத்துள்ளது என்று பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

Update: 2018-03-22 22:57 GMT
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 4½ ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் திடீரென சித்தராமையா அரசு, லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்குவது குறித்து ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு அவசரகதியில் செயல்பட்டு ஒரு அறிக்கையை தயாரித்து அரசிடம் தாக்கல் செய்தது.

அந்த குழு வழங்கிய பரிந்துரையின் பேரில் லிங்காயத், வீரசைவ லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்வதாக இந்த அரசு கூறியுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் தேர்தலில் ஆதாயம் பெறவே இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.

லிங்காயத்தை தனி மதமாக அறிவிக்க கோரி வீரசைவ மகாசபா மத்திய அரசிடம் மனு கொடுத்தது. அந்த கோரிக்கையை அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிராகரித்தது. ஆனால் லிங்காயத் மற்றும் வீரசைவ மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும், அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் கர்நாடக அரசு தற்போது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் முடிவை எடுத்துள்ளது.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத முடிவை எடுத்துள்ள காங்கிரஸ் அரசுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். கர்நாடகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் காங்கிரஸ் மக்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். சித்தராமையா தலைமையிலான அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதுபற்றி ராகுல் காந்தி வாய் திறக்கவில்லை.

மோடி, பா.ஜனதா பற்றியே தான் ராகுல் காந்தி விமர்சனம் செய்து வருகிறார். கர்நாடகத்தில் விவசாயிகளின் தற்கொலை, மோசமான கட்டமைப்பு வசதிகள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் கொலை செய்யப்படுவது குறித்து அவர் பேசவில்லை. பிரதமர் மோடி கர்வத்துடன் செயல்படுவதாக ராகுல் காந்தி கூறுகிறார். காங்கிரசுக்கு தான் அதிக கர்வம் இருக்கிறது. இந்த நாட்டை தாம் மட்டுமே ஆள வேண்டும் என்ற கர்வம் காங்கிரசுக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டனர்.

பெங்களூருவை பாதுகாப்போம் என்ற பெயரில் பெங்களூருவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜனதா சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து 2-வது கட்டமாக பெங்களூருவை பாதுகாப்போம் பாதயாத்திரையை வருகிற 26-ந் தேதி தொடங்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு முரளிதரராவ் கூறினார். 

மேலும் செய்திகள்