மதுரை புதூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்; 400 பேர் கைது
பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை புதூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதூர்,
தமிழ்நாடு மின்வாரிய மதுரை மாநகர் மாவட்ட அனைத்து ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.380 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. மதுரை புதூர் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று அங்குள்ள சாலையின்முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியல் செய்தவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் மறியலில் ஈடுபட்ட சுமார் 400 பேரை போலீசார் கைது செய்தனர்.