மேலூரில் நீதிபதி உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்
மேலூரில் நீதிபதியின் உத்தரவின்படி அரசு பள்ளி அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் குப்பைகளை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றினர்.
மேலூர்,
மேலூரில் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி அருகே உள்ள கால்வாய்க்கரை பகுதியில் இரவு நேரத்தில் ஏராளமான துரித உணவு கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அந்த பகுதியில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதால், குடிமகன்கள் குடித்துவிட்டு மதுபாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர்.
மேலும் துரித உணவு கடைகளின் குப்பைகள், இறைச்சி கழிவுகள் குவியல் குவியலாக அந்த பகுதி முழுவதும் குவித்து வைக்கப்பட்டதால், அந்த இடம் குப்பை மேடாக மாறி, மலை போல் குப்பைகள் தேங்கி கிடந்தன. இந்தநிலையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் அந்த வழியாக சென்றார்.
அப்போது அந்த பகுதியில் ஏராளமான கடைகள் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ளதையும், குப்பைகள் பல இடங்களில் குவிந்து கிடப்பதையும், இவற்றை பொதுமக்கள் பெரிதும் சிரமமப்பட்டு கடந்து சென்று வருவதையும் பார்த்தார். உடனே அவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, உணவு பாதுகாப்பு அதிகாரி அஜ்மல்கான், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஆகியோர் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். மேலும் அந்த பகுதியில் இருந்த குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். நீதிபதியின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் இரவில் கடைகள் போடுவதையும் அப்புறபடுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.