வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.80 அடியாக குறைந்தது சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தம்

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 38.80 அடியாக குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.

Update: 2018-03-22 22:00 GMT
காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக குடிநீர்அனுப்பி வைக்கப்படுகிறது. கீழணையில் திறக்கப்படும் தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும். இதுதவிர மழைக்காலங்களில் செந்துறை, ஆண்டிமடம், அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் வீராணம் ஏரிக்கு வரும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. மேலும் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையாலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, முழுகொள்ளளவை எட்டியது. உபரிநீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலந்தது.

இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததாலும், ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், கடும் வெயில் சுட்டெரிப்பதாலும், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. மேலும் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த வார நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 39.30 அடியாக குறைந்ததால், சென்னைக்கு வினாடிக்கு 71 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 38.90 அடியாக குறைந்ததால், சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 13 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் ஏரியின் நீர்மட்டம் 38.80 அடியாக குறைந்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 77 கன அடி வீதம் தண்ணீர் அனுப்புவோம். 39 அடி வந்தவுடன் தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்படும். தற்போது ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால், சென்னைக்கு தண்ணீர் அனுப்பும் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று காலை 9 மணி வரை வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டது. இதையடுத்து ஏரியின் நீர்மட்டம் 38.80 அடியாக குறைந்ததை தொடர்ந்து, சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணியை நிறுத்தி உள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்