புதுச்சேரியில் பாதாள சாக்கடை பயன்பாட்டிற்கு வரி விதிப்பு

பாதாள சாக்கடையை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.15 முதல் ரூ.1000 வரை வரி விதித்து பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update: 2018-03-22 22:45 GMT
புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் வரி கடுமையாக உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் தொழில் வரி, வணிக உரிம வரி, குப்பை அள்ளுவதற்கு வரி என்று உள்ளாட்சித்துறை சார்பில் வரிகள் விதிக்கப்பட்டன. ஏற்கனவே மின்சார கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு ஏற்பட்ட நிலையில் குப்பை அள்ளுவதற்கும் வரி விதிக்கப்பட்டது மக்களை கோபத்தில் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

வியாபாரிகள் தரப்பில் தொழில் வரி, வணிக உரிம வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கடையடைப்பு போராட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வரி உயர்வினை நிறுத்தி வைப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

இந்தநிலையில் தற்போது பாதாள சாக்கடை பயன்பாட்டிற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. புதுவை நகரப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வராத நிலையில் இந்த வரி அமலுக்கு வந்துள்ளது. கடந்த 2017 மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 10 மாதங்களுக்கான கட்டணத்தை செலுத்தும்படி பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான ரசீதுகள் முதல்கட்டமாக கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரசீது கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுவை நகரப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டபோது, பாதாள சாக்கடைக்கு வரி விதிப்பது தொடர்பாக ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வீடுகளுக்கு அதன் பரப்பளவை பொறுத்து மாதம் ரூ.15 முதல் ரூ.35 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வர்த்தக நிறு வனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய வர்த்தக நிறுவனங் களுக்கு அதிகப்பட்சமாக மாதம் ரூ.1000 வரை வசூலிக்கப்படும். தற்போது 10 மாதத்துக்கான கட்டணத்துக்கான ரசீது வழங்கப்படுகிறது. அதனால் தொகையும் அதிகமாக பொதுமக்களுக்கு தெரிகிறது. அடுத்துவரும் காலங்களில் தண்ணீர் வரியை போன்று 3 மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்