காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்கிறது

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

Update: 2018-03-22 22:45 GMT
கரூர்,

கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் கரூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

தமிழக அரசு இன்று பல்வேறு உரிமைகளை இழந்து பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கூறுகிறது.

தமிழக விவசாயிகளின் பட்டா நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. வட மாநிலங்களுக்கு தமிழகத்தில் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்ல உயர் மின் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு தமிழக விவசாய பட்டா நிலத்தை குறிவைத்து செயல்படுகிறது. அதே சமயம் கேரளா வழியாக செல்லும்போது குழாய் அமைத்து கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதில் தமிழக மக்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை.

தமிழக அரசு காவிரி ஆற்றில் அதிகமாக தடுப்பணை கட்ட வேண்டும். குறிப்பாக நெரூர், வாங்கல், புகழூர் ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்ட தவறினால் விரைவில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி கட்ட வேண்டும். கரூரில் தற்போது மருத்துவ கல்லூரி பணி மெதுவாக நடைபெறுவதால் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு வாடகை கட்டிடம் அமைத்து மாணவர் சேர்க்கை உடனே நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்கிறது

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்