தஞ்சையில் பிளாஸ்டிக் கடைகளில் தீ விபத்து; ரூ.18 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

தஞ்சையில், பிளாஸ்டிக் கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. வாகனம் செல்ல முடியாத இடத்தில் கடை இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

Update: 2018-03-22 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கலங்கம் மற்றும் தெற்கு வீதிக்கு இடைபட்ட பகுதியில் ஏராளமான மொத்த விற்பனை கடைகள், சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இங்கு பிளாஸ்டிக் பொருட்கள், பேன்ஸி ஸ்டோர், தோல் பொருட்களான பெல்ட், பேக், சூட்கேஸ் போன்றவை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு சொந்தமான குடோன்களும் ஆங்காங்கே உள்ளன.

இங்கு சிறிய, சிறிய சந்து பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இதில் கூத்தப்பார்சந்து பகுதியில் ஜெயக்குமார்(வயது 51) என்பவருக்கு சொந்தமான 3 கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் அவர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். அருகில் உள்ள மற்றொரு கடையை பாபுராம்(37) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

ஜெயக்குமார் தனது கடைக்கு அருகில் உள்ள மற்றொரு கடையை குடோனாக பயன்படுத்தி வந்தார். இங்கு ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை பாபுராம் கடைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் லோடு வந்தது. அதனை கடையில் இறக்கி வைத்து விட்டு அவர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் ஜெயக் குமார் மற்றும் பாபுராம் கடையினுள் இருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை காணப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் எரியும் வாடையும் வீசியது. இதனைப்பார்த்த அக்கம், பக்கத்தில் கடை வைத்திருந்தவர்கள் இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) இளஞ்செழியன் உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆனால் கடை இருந்த பகுதி வாகனம் செல்ல முடியாத அளவிற்கு சிறியதாக இருந்ததால் தெற்கலங்கம் பகுதியில் தீயணைப்பு வண்டியை நிறுத்தினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு சாதனங்களை சந்து வழியாக எடுத்துச்சென்று கடுமையாக போராடி தீயை அணைத்தனர். தஞ்சை விமானப்படை நிலையத்தில் இருந்தும் தீயணைப்புபடையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் கடை மற்றும் குடோன்களில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதில் ஜெயக்குமார் கடை மற்றும் குடோனில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களும், பாபுராம் கடையில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் என மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என தெரியவில்லை. இது குறித்து இருவரும் தனித்தனியாக தஞ்சை மேற்கு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்