குறைந்தபட்ச ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டம்

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கக்கோரி திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

Update: 2018-03-22 23:00 GMT
திருவாரூர்,

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்களின் சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் மாநில அளவில் அரசிற்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முனியாண்டி தலைமையில், மாவட்ட கவுரவ தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ஜெயராஜ், சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் பாண்டியன், நிர்வாகிகள் செல்வி, ராணி, சத்தியன், முருகேசன் ஆகியோர் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணியிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து தமிழக அரசு கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி அரசாரணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஒரு நாள் அடிப்படை ஊதியமாக ரூ.385, பஞ்சப்படியாக ரூ.124.16 ஆக மொத்தம் ரூ.509.16 வீதம் கணக்கீட்டு வழங்க வேண்டும். அதன்படி ஒரு மாதம் ஊதியம் ரூ.13 ஆயிரத்து 238 வீதம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி 2017 ஆண்டு முதல் நிலுவை தொகை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணி புரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்