வீட்டைவிட்டு வெளியேறிய வாலிபர் 1 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

10-ம் வகுப்பு தேர்வுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிய வாலிபர் 1½ ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டார்.

Update: 2018-03-22 21:30 GMT
நெட்டப்பாக்கம்,

நெட்டப்பாக்கம் அருகே மடுகரை பி.எஸ். நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் சந்துரு (வயது 17), கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க அவரது பெற்றோர் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சந்துரு, வீட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து சந்துருவை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக அவரது பெற்றோர் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சந்துரு மாயமாகி 1½ ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று முன்தினம் தனது பாட்டி மலரிடம் அவர் போனில் பேசினார். அப்போது தான் வேலூரில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து சந்துருவின் பெற்றோர் நெட்டப்பாக்கம் போலீசார் உதவியுடன் வேலூருக்கு சென்று சந்துருவை மீட்டு வந்தனர்.

அவரிடம் போலீசார் விசாரித்ததில், 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்று பெற்றோர் நெருக்கடி கொடுத்ததால், தேர்வுக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறி சென்னை சென்றதாகவும், அங்கிருந்த சரக்கு லாரி ஒன்றில் ஏறி மும்பைக்கு சென்றேன். பின்னர் லாரி டிரைவருக்கு உதவியாக கிளனராக வேலை செய்துவந்தேன். பெற்றோரை பார்க்கவேண்டும் என்று விரும்பியதால், மும்பையில் இருந்து வேலூர் வந்த லாரியில் என்னை டிரைவர் அனுப்பி வைத்ததாக சந்துரு கூறினார்.

இதையடுத்து சந்துருவை புதுவை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 1½ ஆண்டுகளாக மகனின் நிலை என்ன என்று தெரியாமல் தவித்த சந்துருவின் பெற்றோர், அவரை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.

மேலும் செய்திகள்