ஓட்டலில் துப்பாக்கியால் சுட்ட சென்னை வக்கீல் கைது

கேளம்பாக்கம் அருகே அசைவ உணவு பரிமாறப்பட்டதால் ஓட்டல் மேலாளர் மீது துப்பாக்கியால் சுட்ட சென்னை வக்கீல் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-03-22 23:30 GMT
திருப்போரூர்,

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள சாலை புதூரைச்சேர்ந்தவர் மாதவன். சென்னை அண்ணா நகரில் தங்கி வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான விடுதி கேளம்பாக்கத்தில் உள்ளது.

இதற்காக கேளம்பாக்கத்துக்கு மாதவன் வந்தார். பின்னர் அவர் தன்னுடன் வந்த சிலருடன் படூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கினார். அந்த ஓட்டலில் தன்னுடன் வந்தவர்களுடன் அவர் இரவில் சாப்பிட சென்றார்.

அங்கு சைவ உணவை அவர்கள் கேட்டனர். ஆனால் அவர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. இது குறித்து மாதவன் கேட்டபோது, சைவ உணவு முடிந்துவிட்டதாக ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஓட்டல் ஊழியர்களுக்கும், மாதவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஓட்டல் மேலாளர் சங்கரலிங்கம், தன்னுடைய ஊழியர்களுக்கு ஆதரவாக பேசினார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மாதவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஓட்டல் மேலாளர் சங்கரலிங்கத்தை நோக்கி சுட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குறி தவறி அருகில் இருந்த கண்ணாடி தடுப்புகளில் பட்டு தெறித்து கார் கண்ணாடியை தாக்கியது. இதில் கார் கண்ணாடி, ஓட்டல் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.

இதை கண்டு ஓட்டலில் சாப்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர் இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வக்கீல் மாதவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மாதவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்