குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி வழக்கு: தேவகோட்டை ரஸ்தாவில் மாவட்ட நீதிபதி ஆய்வு
காரைக்குடியை அடுத்த தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள குப்பைக்கிடங்கை அகற்றக்கோரிய வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்குடி,
காரைக்குடியை அடுத்த தேவகோட்டை ரஸ்தா பகுதியில் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், தேவகோட்டை நகராட்சி உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. தற்போது அப்பகுதி விரிவடைந்த காரைக்குடி நகராட்சியின் ஒருபகுதியாகவும், ஏராளமானோர் வசிக்கும் குடியிருப்பு பகுதியாகவும் உள்ளது. மேலும் தேவகோட்டை ரஸ்தாவில் 10-க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்தநிலையில் குப்பைக்கிடங்கால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறிவருகின்றனர். மேலும் குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தினர். இதற்கிடையில் காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அதே பகுதியில் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்கும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த சாமி, மக்கள் நல உரிமை சங்கத்தை சேர்ந்த ஜேம்ஸ் டேனியல், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசுசோமன் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, மக்களை பாதிக்கும் குப்பைக்கிடங்கை அகற்ற கோரினர். இதனைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுபடி சிவகங்கை மாவட்ட சார்பு நீதிபதி வடிவேல் தேவகோட்டை ரஸ்தா பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். குப்பைக்கிடங்கு மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை அவர் ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மனுவாக நீதிபதியிடம் அளித்தனர். இந்த ஆய்வு குறித்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று நீதிபதி வடிவேல் தெரிவித்தார். ஆய்வின்போது காரைக்குடி நகராட்சி ஆணையாளர் சுந்தரம்பாள் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.