போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-03-22 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரி அமைத்து முறையாக மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்கவேண்டும், மணல் தட்டுப்பாட்டை போக்க காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களை கடுமையாக தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ரெங்கராஜன், மாவட்ட செயலாளர் சம்பத் மற்றும் சுப்பிரமணி, கனகராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்