திருப்பூரில் பனியன் நிறுவன அதிபர் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை கீழே தள்ளி 39 பவுன் நகை-ரூ.7¾ லட்சம் கொள்ளை

திருப்பூரில் பனியன் நிறுவன அதிபரின் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை கீழே தள்ளி விட்டு, 39 பவுன்நகை மற்றும் ரூ.7 லட்சத்து 85 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமியை 8 மணி நேரத்தில் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2018-03-22 22:00 GMT
அனுப்பர்பாளையம், 

திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டியை அடுத்த தோட்டத்துப்பாளையம் ஜி.என்.நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 37). இவர் அந்த பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (32). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொழில் சம்பந்தமாக அருண்குமார் வெளியே சென்று விட்டார். இதனால் வீட்டின் முன் பக்க கதவை பூட்டி விட்டு சாவியை கதவிலேயே வைத்து விட்டு ராஜேஸ்வரி, தனது மகளுடன் தூங்கினார்.

இந்த நிலையில் நள்ளிரவு வீட்டில் உள்ள பீரோ திறக்கும் சத்தம் கேட்டு ராஜேஸ்வரி திடுக்கிட்டு எழுந்து வீட்டின் ஹாலில் உள்ள விளக்கு சுவிட்சை ஆன் செய்தார். அப்போது பீரோ அருகே ஒரு ஆசாமி நின்று கொண்டிருந்தார். ராஜேஸ்வரியை பார்த்ததும் அந்த ஆசாமி அவரை கீழே தள்ளி விட்டு, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு சாவியை வீட்டின் வளாகத்தில் வீசிவிட்டு ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து “திருடன், திருடன்” என்று ராஜேஸ்வரி சத்தம் போட்டார். ஆனால் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் அவரால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. பின்னர் ராஜேஸ்வரி திறந்து கிடந்த பீரோவை பார்த்த போது அதில் இருந்த சங்கிலி, ஆரம், வளையல், கம்மல் உள்ளிட்ட 39 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்து 85 ஆயிரம் அனைத்தையும் அந்த ஆசாமி கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட ராஜேஸ்வரி நடந்த சம்பவத்தை கூறினார். இதனால் பதற்றம் அடைந்த அருண்குமார் அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் வளாகத்தில் கிடந்த சாவியை எடுத்துக்கொண்டு கதவை திறந்து உள்ளே சென்றார். உடனே இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளையரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர்கள் (சட்டம்-ஒழுங்கு) கயல்விழி கண்காணிப்பில் உதவி கமிஷனர் அண்ணாத்துரை மேற்பார்வையில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.டி.ராஜன்பாபு, தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏட்டுகள் காளிமுத்து, ஜெயக்குமார், சங்கரநாராயணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை பி.என்.ரோடு கண்ணகிநகரை சேர்ந்த ரகுராம் (37) என்பவர் மனைவி தேவியுடன் மோட்டார்சைக்கிளில் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை ஒரு ஆசாமி வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, தேவி கழுத்தில் கிடந்த நகையை கழற்றி தருமாறு மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரகுராம் “திருடன் திருடன்” என்று கூச்சல் போட்டுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த ஆசாமியை பிடித்து தர்மஅடி கொடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள அரசம்பட்டியைசேர்ந்த சிவா (40) என்பதும், தற்போது திருப்பூர் பூலுவப்பட்டி பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவில் தோட்டத்துபாளையத்தில் உள்ள அருண்குமார் வீட்டிற்குள் புகுந்து 39 பவுன்நகை மற்றும் ரூ.7 லட்சத்து 85 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சிவாவை போலீ சார் கைது செய்தனர்.

சம்பவத்தன்று நள்ளிரவு அருண்குமார் வீட்டுக்கு சிவா சென்றுள்ளார். அங்கு வீட்டில் ராஜேஸ்வரி மகளுடன் தனியாக இருப்பதையும் தெரிந்து கொண்டார். பின்னர் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே சிவா எட்டி பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. மேலும் கதவிலேயே சாவியும் இருந்துள்ளது. இதை பார்த்த சிவா ஜன்னல் வழியாக கையை உள்ளே விட்டு சாவி மூலமாக கதவை திறந்து நைசாக வீட்டிற்குள் சென்றார்.

அப்போது ராஜேஸ்வரி மற்றும் அவருடைய மகள் தூங்கிக் கொண்டிருந்தனர். இதையடுத்து பீரோ இருக்கும் அறைக்கு சென்ற சிவா, அங்கு பூட்டப்படாமல் இருந்த பீரோ கதவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 39 பவுன் நகை மற்றும் ரூ. 7 லட்சத்து 85 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து சிவாவிடம் இருந்து நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவா மீது கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையன் சிவாவை 8 மணிநேரத்தில் கைது செய்தனர். இதையடுத்து தனிப்படையை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.டி.ராஜன்பாபு மற்றும் ஏட்டுகளுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் பாராட்டு தெரிவித்ததோடு, பணவெகுமதியும் வழங்கினார்.

மேலும் செய்திகள்