சின்னமனூரில் ஆக்கிரமிப்பில் சிக்கிய பாதை அகற்ற பொதுமக்கள் கோரிக்

சின்னமனூர் பகுதியில் சிவகாமி அம்மன் கோவில்-எல்லுக்கட்டை பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-03-22 22:45 GMT
சின்னமனூர், 

திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சின்னமனூர் அமைந்துள்ளது. இங்கு சிவகாமி அம்மன் கோவிலில் இருந்து வயல்வெளி வழியாக திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் எல்லுக்கட்டை பாதை உள்ளது. இந்த பாதை தொடக்க காலத்தில் அகலமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் வழியாக விவசாய நிலங்களுக்கு டிராக்டர்களை கொண்டு சென்றுள்ளனர். நாளடைவில் இந்த பாதை ஆக்கிரமிக்கப்பட்டு மிகவும் குறுகியதாக மாறி விட்டதாக தெரிகிறது. தற்போது இந்த பாதை இருந்த இடம் தெரியாமல் போகும் நிலை உள்ளது. அந்த அளவுக்கு அதனை சுற்றி விவசாய நிலங்களாக மாறி விட்டன. இந்த பாதையில் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இதனால் சிவகாமி அம்மன் கோவிலுக்கு வாகனங்களில் பொதுமக்கள் செல்ல முடியாமலும், விவசாயிகள் விளைபொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சின்னமனூர் நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் அமைந்துள்ள எல்லுக்கட்டை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்ட போது, எல்லுக்கட்டை பாதை விவசாயிகளும், பொதுமக்களும் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் அகலம் குறைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. நகராட்சியில் பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு உத்தரவிடவேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்