ஒகி புயலால் பாதிக்கப்பட்ட 1,100 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை விரைவில் செலுத்தப்படும்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட 1,100 விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.

Update: 2018-03-22 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) குணபாலன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அசோக்மேக்ரின், பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் பிரசாந்த் வடநேரே பொறுப்பேற்றபிறகு நடைபெற்ற முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்ததால் கூட்டம் தொடங்கியதும் அவருக்கு விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் வாழ்த்து தெரிவித்து, சால்வை அணிவித்தனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் எடுத்து வைத்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:–

குளம் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டுறவு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வறட்சி, புயல் போன்ற காரணங்களால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற கடனை கட்ட முடியாத விவசாயிகளுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அரசு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலை நெல்லுக்கு கிடைக்கவில்லை. எனவே அரசு நிர்ணயித்திருக்கும் விலையைவிட குறைவான விலைதான் எங்களுக்கு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் 8 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இருந்தது. அதைப்போல் இந்த ஆண்டும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த மாவட்டத்தில் நான்குவழிச்சாலை பணி நடைபெறுகிறது. ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சாலை அமைப்பதற்காக இந்த பணி நடைபெறும் பகுதிகளில் 239 இடங்களில் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. குழாய்கள் அமைக்கப்படும் இடங்களில் எல்லாம் சிறு பாலங்கள் அமைக்க வேண்டும். இல்லை என்றால் குமரி மாவட்டத்தின் வடக்கே சதுப்பு நிலமாகவும், தெற்கே பாலைவனமாகவும் மாறும் நிலை ஏற்பட்டுவிடும்.

கேரளாவில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணம் போன்று குமரி மாவட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை. மிக, மிக குறைவான அளவிலேயே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.7 லட்சம் வழங்க வேண்டும். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பலருக்கு நிவாரணத்தொகை வங்கி கணக்குகளில் செலுத்தப்படவில்லை.

இறச்சகுளம், பூதப்பாண்டி, திட்டுவிளை, ஈசாந்திமங்கலம் போன்ற பகுதிகளில் மரச்சீனி பயிர் ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எனவே விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள் (அப்போது சம்பந்தப்பட்ட விவசாயி, நோயால் பாதிக்கப்பட்ட மரச்சீனி கன்றுகளையும் கொண்டு வந்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் காண்பித்தார்). கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் குளங்களை தூர்வார விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் 25 விவசாயிகள் இறந்தனர். ஆனால் அவர்களில் 15 பேருக்குத்தான் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதம் உள்ள 10 பேருக்கும் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பதில் அளித்து பேசியதாவது:–

கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் தேவையான நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். எனவே எந்தெந்த இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்பதை தெரிவித்தால் அங்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

ஒகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் சுமார் 1,109 விவசாயிகளுக்கு வங்கிகளில் செலுத்தப்பட்ட நிவாரணத்தொகை திரும்ப வந்துள்ளது தெரிய வந்தது. அதற்கு காரணமாக வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காதது, வங்கிக்கணக்கு தொடர்ந்து செயல்பாட்டில் இல்லாதது போன்ற காரணங்களில் நிவாரணத்தொகை திரும்ப வந்துள்ளது. அவ்வாறு நிவாரணத்தொகை திரும்ப வந்த விவசாயிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த விவரம் கிராம நிர்வாக அலுவலகங்களில் ஒட்டப்படும். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேசி சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மரச்சீனி பயிரில் ஏற்பட்டுள்ள நோய் தொடர்பாக திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் மத்திய கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மூலமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் 2 முறை வந்து பார்த்து ஆய்வு செய்து மரச்சீனியை தாக்கும் மாவுப்பூச்சி எது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வு முடிவுகள் வந்ததும் அதற்கான ஒட்டுண்ணிகள் கொடுக்கப்பட்டு அந்த நோய் கட்டுப்படுத்தப்படும்.

தண்ணீர் இல்லாத குளங்களில் விவசாயிகள் தூர்வார அனுமதி அளிக்கப்படும். எனவே அந்தந்த தாசில்தாரிடம் இப்போது மனு கொடுக்கலாம். ஒகி புயலில் இறந்த 15 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் இறந்தது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கமாக மார்ச் மாதத்தில் சராசரியாக 47.8 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 26 மி.மீ. மழை பெய்துள்ளது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 992 எக்டரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 3 ஆயிரத்து 600 எக்டர் அறுவடையாகி உள்ளது. அதிக மகசூலும் கிடைத்துள்ளது. அடுத்த நடவுக்கு தேவையான விதை, ரசாயன உரம் கையிருப்பில் உள்ளது.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களில் 132–க்கு பதில் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் பிரசாந்த் வடநேரே விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உடனடியாக தீர்வு காண்கிறார் என்று விவசாயிகள் பாராட்டினர். அதற்கு உதாரணமாக, நேற்றைய கூட்டத்தில் நெல் கொள்முதல் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தவுடன் உடனே அமைக்க நடவடிக்கை எடுத்ததாகவும், புத்தளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக விவசாயிகள் குற்றச்சாட்டு கூறியதும், அதுதொடர்பாக விசாரணை நடத்த கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளான புலவர் செல்லப்பா, பத்மதாஸ், மருங்கூர் செல்லப்பா, தாணுப்பிள்ளை, விஜி, முருகேசபிள்ளை, செண்பகசேகரன்பிள்ளை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்