அடிப்படை வசதிகள் கேட்டு கூடலூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

அடிப்படை வசதிகள் கேட்டு கூடலூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-22 22:00 GMT
கூடலூர், 

கூடலூரில் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு லோயர்கேம்ப் காலனி பகுதியில் சுமார் 75-க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.

இந்த பகுதியானது கூடலூர்-லோயர்கேம்ப் நெடுஞ்சாலையை விட மிகவும் தாழ்வாக உள்ளதால் மழைக்காலங்களில் வரும் ஓடைநீரும், கழிவுநீரும் காலனிக்குள் புகுந்து விடுகிறது. இந்த கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி ஆணையர் சத்தியநாதனிடம் அடிப்படை வசதிகள் தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் இதுகுறித்து நாளை (அதாவது இன்று) மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம், என்று தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஆணையாளர் சத்தியநாதன் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அவற்றை அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. அவை அகற்றப்பட்ட பின்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கழிவுநீர் சாக்கடை கால்வாயும், பேவர்பிளாக் ரோடும் போட நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதி மக்களின் நலன் கருதி மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதியில் தேங்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்ற மின் மோட்டார் வசதி செய்து தரப்படும், என்றார்.

மேலும் செய்திகள்