அதிகாரி நெருக்கடியால் உதவியாளர் தற்கொலை: நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை

அதிகாரி நெருக்கடியால் அங்கன்வாடி உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-03-22 21:00 GMT
நெல்லை,

அதிகாரி நெருக்கடியால் அங்கன்வாடி உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அங்கன்வாடி உதவியாளர்

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே வாகைக்குளத்தை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி சுமதி (வயது 37). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ் இறந்து விட்டார்.

கணவரை இழந்த சுமதிக்கு கருணை அடிப்படையில் வாகைகுளத்தில் அங்கன்வாடி உதவியாளராக வேலை கிடைத்தது. ஒரு மாதம் வேலைக்கு சென்ற அவர் திடீரென்று உடல்நலம் சரியில்லை என்று கூறி வேலைக்கு செல்லவில்லையாம். மேலும் தனது பெற்றோர் ஊரான கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிகுளத்தில் 2 குழந்தைகளுடன் அவர் தங்கி இருந்தார்.

தீக்குளித்தார்

பெற்றோர் வீட்டில் இருந்த சுமதி, கடந்த 12–ந் தேதி (திங்கட்கிழமை) திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெண் அதிகாரி ஒருவர், கொடுத்த நெருக்கடியால் சுமதி தீக்குளித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கடையம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதற்கிடையே ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று முன்தினம் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

சுமதி இறந்த தகவல் அறிந்தவுடன் உறவினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அப்போது சுமதியின் உடலை வாங்க மறுத்ததுடன், சுமதியின் சாவுக்கு காரணமான அதிகாரியை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

2–வது நாளாக...

சுமதியின் உடலை வாங்க மறுத்து நேற்று 2–வது நாளாக அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

சுமதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கடையம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தியை கைது செய்ய வேண்டும் என்று கூறி கோ‌ஷங்களை எழுப்பினர். அங்கன்வாடி ஊழியர்கள் 500–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள், சுமதியின் உறவினர்கள், அங்கன்வாடி பணியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து சுமதியின் உடலை உறவினர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்