சூரியக் குடும்பத்தில் உயரமான மலை
சூரியக் குடும்பத்தில் உயரமான மலை எது என்று கேட்டால்தான் எல்லோருக்கும் விழி பிதுங்கும்.
நமது பூமியிலேயே உயரமான மலை எது என்று கேட்டால் பலரும், ‘எவரெஸ்ட் சிகரத்தைக் கொண்டிருக்கும் இமயமலை’ என பட்டென்று பதில் சொல்லிவிடுவார்கள்.
ஆனால் பூமி உள்ளிட்ட கிரகங்கள் அடங்கிய சூரியக் குடும்பத்தில் உயரமான மலை எது என்று கேட்டால்தான் எல்லோருக்கும் விழி பிதுங்கும்.
இப்போது அதற்கு விடை தெரிந்துகொள்ளுங்கள். சிறுகிரகமான ‘வெஸ்டா’வில் உள்ள ‘ரெசில்வியா’ என்ற மலைதான் அது.
செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் மிக உயரமான மலை, ‘ஒலம்பஸ் மோன்ஸ்’. இது நமது எவரெஸ்ட் சிகரத்தைவிட உயரமானது. 21 ஆயிரத்து 900 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலைதான் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் உயரமான மலையாகக் கருதப்பட்டு வந்தது.
ஆனால் அந்தப் பெருமையை ‘ரெசில்வியா’ தட்டிச் சென்றுவிட்டது. சூரியனைச் சுற்றிவரும் மிகவும் சிறிய கிரகமான வெஸ்டாவில் இந்த மலை கண்டுபிடிக்கப்பட்டது. வெஸ்டாவின் ரெசில்வியா மலையின் உயரம், செவ்வாயின் மோன்ஸ் மலையைவிட வெறும் 100 மீட்டர்தான் அதிகம்.
இந்த அளவீடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தாலும், தற்போதைய கணக்கின்படி ரெசில்வியாவே சூரியக் குடும்பத்தில் மிகவும் பெரிய மலையாகக் கருதப்பட்டு வருகிறது.
வெஸ்டாவுக்குச் செலுத்தப்பட்ட விண்கலம் கடந்த 2011-ம் ஆண்டுவரை செய்த ஆய்வில் இந்த மலையானது மிகப்பெரிய பள்ளத்திலிருந்து உயரமாக உள்ளது கண்டறியப்பட்டது. அந்தப் பள்ளத்தின் விட்டம் மட்டும் 505 கிலோ மீட்டர்களாம்.
நமக்குத் தெரியாமலே ஓர் அடேங்கப்பா மலை!