கணினி பாதுகாப்பில் கலக்கும் இளைஞர்!

பள்ளிப் படிப்பைக் கூட முறையாக முடிக்காத திரிஷ்நீத், இன்று பல பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்திருக்கிறார்.

Update: 2018-03-23 23:15 GMT
‘பட்டம் தேவையில்லை, திறமை இருந்தால் போதும், வாழ்வில் ஜெயிக்கலாம்’ என்பதற்கு உதாரணம், பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த திரிஷ்நீத் அரோரா.

தானே கணினிகளைப் பிரித்து வளர்ந்துக்கொண்ட அறிவால், ‘சைபர் செக்யூரிட்டி’ எனப்படும் கணினிப் பாதுகாப்பில் திரிஷ்நீத் கலக்குகிறார்.

இந்த 24 வயது இளைஞர் நான்காண்டுகளுக்கு முன் தொடங்கிய கணினிப் பாதுகாப்பு நிறுவனம், கணினி உலகில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கிறது.

திரிஷ்நீத்தின் இன்றைய வாடிக்கையாளர் பட்டியலைப் பார்த்தால் அசந்து போவீர்கள்.

சி.பி.ஐ., பஞ்சாப், குஜராத் மாநில காவல் துறைகள், ரிலையன்ஸ் குழுமம் என்று அந்தப் பட்டியல் போகிறது.

அது மட்டுமல்ல, நான்கு வெளிநாட்டு அரசுகளும் திரிஷ்நீத்தின் சேவையைப் பெறுகின்றன.

சிறுவயது முதலே எதையும் ஆய்ந்து அறியும் ஆர்வத்துடன் அலைந்துகொண்டிருப்பாராம் திரிஷ்நீத்.

குழந்தைப் பருவத்திலேயே எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்களில் விளையாடுவதில் விருப்பமாக இருந்த திரிஷ்நீத், அவை எப்படிச் செயல்படுகின்றன என்று பார்க்கவும் தொடங்கினாராம்.

அடுத்தகட்டமாக, கணினிகளை பிரித்துப் போடவும், பின் மீண்டும் அவற்றை ஒன்று சேர்த்து இயங்கவைக்கவும் செய்திருக்கிறார். இந்த முயற்சியில் திரிஷ்நீத் முதல்முறையாக இறங்கியபோது இவருக்கு வயது 8.

“என்னுடைய எல்லைமீறிய முயற்சியால், ஒவ்வோர் ஆண்டும் எங்கள் வீட்டில் ஒரு கணினி காலாவதி ஆவதும், புதிதாக ஒரு கணினி வருவதும் வழக்கமாகின” என்று புன்னகையுடன் நினைவுகூர்கிறார், திரிஷ்நீத்.

இவர் இப்படிச் சொன்னாலும், சீக்கிரமே கணினி பழுதுநீக்குவதில் நிபுணராகிவிட்டாராம். அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் தங்கள் வீட்டு கணினிகள் பழுதடையும்போது திரிஷ்நீத்தையே கூப்பிட்டிருக் கிறார்கள்.

இணையத்தின் உதவியால், ‘லான்’ உள்ளிட்ட நெட்ஒர்க்குகளை எப்படி அமைப்பது என்று திரிஷ்நீத் அறிந்து கொண்டிருக்கிறார். எட்டு கணினிகளைக் கொண்டு அவரே ஒரு நெட்ஒர்க்கை அமைத்திருக்கிறார்.

அடுத்ததாக, கணினியை மால்வேர்கள் போன்றவற்றின் தாக்குதலில் இருந்து எப்படிக் காப்பது என்ற யோசனை திரிஷ்நீத்துக்கு எழுந்திருக்கிறது.

கணினியில் இவரே பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்தி, அவற்றில் ஊடுருவி (ஹாக்) சோதித்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.

தொடர்ந்து அவ்வாறு செயல்பட்டு, ‘எத்திக்கல் ஹாக்கிங்’கை கற்றுக்கொண்டிருக்கிறார்.

“கணினிப் பாதுகாப்பில் எனக்கு மிகுந்த ஆர்வம். இது பற்றி நான் ஓரளவு அறிவை வளர்த்துக்கொண்டதுடன், கடந்த 2003-ம் ஆண்டு முதல், பொறியியல் கல்லூரிகள், கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கினேன். அதில் ஐ.ஐ.டி.களும் அடக்கம்.”

தொழில்நுட்பத்தின் மீது எப்படி இப்படித் தணியாத ஆர்வம் என்று கேட்டால்,

“மேட்ரிக்ஸ் போன்ற படங்களை நான் பார்த்திருக்கிறேன். இன்று ஒரு மனிதரின் வாழ்க்கை, தொழில்நுட்பம் சார்ந்துதான் இருக்கிறது என்று அந்தப் படங்கள் காட்டும். எதிர்காலத்தில் முழுக்க முழுக்கத் தொழில்நுட்பம்தான் உலகை ஆளும்” என்கிறார் திடமாக.

கணினிப் பாதுகாப்பு பயிற்சிகளை அளிக்கத் தொடங்கிய திரிஷ்நீத், அதற்கு ஒரு நியாயமான கட்டணமும் பெற்றுக்கொண்டிருக்கிறார்.

இப்படித்தான் தனது கனவு நிறுவனத்துக்குத் தேவையான அடிப்படை நிதியை திரிஷ்நீத்தால் திரட்ட முடிந்ததாம்.

தற்போது இவரது கணினிப் பாதுகாப்பு நிறுவனத்தில் 45 பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் சராசரி வயது 25தான்.

“இன்று நாங்கள் ஒரு பலகோடி மதிப்புள்ள நிறுவனம். உண்மையில் அதற்கான அர்த்தம் எனக்குப் புரியவில்லை. நான் முறையாக கல்வி கற்காததால் வாடிக்கையாளர்களை எப்படி சந்தித்துப் பேசுவது என்றுகூடத் தெரியவில்லை.” -திரிஷ்நீத் இப்படிச் சொன்னாலும், தங்கள் கணினி நிறுவனத்தை உலகளாவிய பெரும் நிறுவனங்களுள் ஒன்றாக வளர்க்க விரும்புகிறார்.

இரண்டே ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் திரிஷ்நீத்தும் அவரது சக ஊழியர்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

மேலும் செய்திகள்