ஓமலூர் அருகே ரெயிலில் அடிபட்டு 3 மான்கள் சாவு
ஓமலூர் அருகே ரெயிலில் அடிபட்டு 3 மான்கள் இறந்தன.
ஓமலூர்,
ஓமலூர் அருகே உள்ள டேனிஸ்பேட்டை வனச்சரகம் ஏற்காடு சேர்வராயன் மலை வனப்பகுதியின் ஒரு பகுதியாகவும், காஞ்சேரி, லோக்கூர், பெலாப்பள்ளிகோம்பை, கணவாய்புதூர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட அடர்ந்த காடு ஆகும். இந்த காட்டில் மான்கள், காட்டுப்பன்றிகள், யானைகள் போன்ற வன விலங்குகள் உள்ளன.
தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மான்கள், காட்டுப்பன்றிகள் போன்றவை தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு வருகின்றன. அவ்வாறு வரும் மான்களை சிலர் வலை விரித்து பிடிப்பதாக கூறப்படுகிறது. தெருநாய்களும் மான்களை கடித்து கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த நிலையில் நேற்று லோக்கூர் வனப்பகுதியில் இருந்து இரை மற்றும் தண்ணீர் தேடி 3 புள்ளிமான்கள் சேலம்-சென்னை ரெயில் தண்டவாளத்துக்கு வந்தன. அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் அடிபட்டு 2 மான்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. ஒரு புள்ளிமான் மட்டும் படுகாயத்துடன் உயிருக்கு போராடியது.
இதுபற்றி தகவல் அறிந்த டேனிஸ்பேட்டை வனச்சரகர் செல்வராஜ் உத்தரவின்பேரில் வன காப்பாளர்கள் திருமுருகன், பச்சியப்பன், கோபால் ஆகியொர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த மான்களை மீட்டு டேனிஸ்பேட்டை வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் உயிருக்கு போராடிய அந்த புள்ளிமானும் இறந்தது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின்னர் 3 மான்களும் அடக்கம் செய்யப்பட்டன.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ரெயிலில் அடிபட்டு இறந்த 3 புள்ளிமான்களும், பெண் மான் ஆகும். அவற்றுக்கு முறையே 4 வயது, ஒரு வயது, 8 மாதம் இருக்கும் என்றனர்.