எல்லையில் சீனா விமானப்படை தளம் அமைக்கிறது பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்கிறார்?- ராகுல் காந்தி

சீனா விமானப்படை தளம் அமைக்கிறது நாட்டை கவனிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்கிறார் என ராகுல் காந்தி எழுப்பி உள்ளார்.;

Update: 2018-03-22 00:09 GMT
சிக்கமகளூரு,

எல்லையில் சீனா விமானப்படை தளம் அமைக்கிறது என்றும், நாட்டை கவனிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்கிறார்? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் இரவு மங்களூருவில் தங்கினார். நேற்று காலையில் அவர் மங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரிக்கு வந்தார்.

சிருங்கேரியில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர் அங்கிருந்து கார் மூலம் சிருங்கேரி சாரதம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை தரிசித்தார். பின்னர் மடாதிபதி பாரதிய தீர்த்த சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார். அதையடுத்து அவர் கோவில் நிர்வாகிகளிடம் கோவில் தல வரலாறு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் மடத்தில் சமஸ்கிருதம் படித்து வரும் சிறுவர்களுடன் கலந்துரையாடினார்.

அதன்பிறகு அவர் அங்கிருந்து காரில் சிருங்கேரியில் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவனத்திற்கு சென்று அதை திறந்து வைத்தார்.

அதையடுத்து அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிக்கமகளூரு சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு மைதானத்திற்கு வந்தார். பின்னர் அங்கு “மக்களின் ஆசீர்வாதம்” என்ற பெயரில் நடந்த காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது பாட்டி இந்திராகாந்தி 1978-ம் ஆண்டு சிக்கமகளூரு பாராளுமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகுதான் அவர் நாட்டில் மாற்றங்களை கொண்டு வந்தார். அதனால் நான் இந்த மண்ணை மறக்க மாட்டேன். எனக்கும், இந்த மண்ணுக்கும் பந்தம் உள்ளது. இங்குள்ள மக்கள் எந்த ஒரு பிரச்சினை என்றாலும், சின்ன தேவைகள் இருந்தாலும் உடனே எனக்கு தகவல் கொடுங்கள். அதை நான் நிறைவேற்றி வைப்பேன்.

ஆர்.எஸ்.எஸ்.-ம், பா.ஜனதாவும் சேர்ந்து நாட்டை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. நாட்டில் மக்கள் பிளவு பட்டு இருக்கிறார்கள். இந்த பிளவை நீக்கி மக்களை ஒன்று சேர்க்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் மக்களை ஒன்று சேர்ப்பேன்.

நான் சிருங்கேரி மடத்திற்கு சென்றபோது அங்கிருந்த ஒரு சிறுவனிடம் கலந்துரையாடினேன். அப்போது அந்த சிறுவனிடம் நான் எதற்காக படிக்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அந்த சிறுவன் “சத்தியமே விஜயா’ என்று கூறினான். நான் அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். அப்போது அந்த சிறுவன் நாங்கள் வாழ்நாளில் சத்தியம்தான் பேசுவோம், பொய் பேசமாட்டோம். அதற்காகத்தான் சமஸ்கிருதம் படிக்கிறோம் என்று கூறினான்.

அந்த சிறுவனுக்கு தெரியக்கூடிய விஷயம் கூட பல்வேறு நாடுகளுக்கு சென்று சுற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியவில்லை. எங்கு சென்றாலும் அவர் பொய்யை மட்டுமே பேசிவருகிறார்.

என்னை பிரதமர் ஆக்கினால் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று நரேந்திர மோடி கூறினார். ஆனால் இதுவரையில் அவர் யாருடைய வங்கி கணக்கிலும் 10 ரூபாயை கூட செலுத்தவில்லை. இந்த 4 வருடத்தில் நாடு எந்த ஒரு வளர்ச்சியையும் அடையவில்லை. வீழ்ச்சியைத்தான் சந்தித்து வருகிறது.

நான் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவேன் என்று நரேந்திர மோடி உறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்தபிறகு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா?.

இதுவரையில் அவர் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்திற்கு நான் நேரடியாக சென்று நரேந்திர மோடியை சந்தித்தேன். அப்போது கர்நாடகத்தில் உள்ள தேசிய வங்கிகளில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி அவரிடம் வலியுறுத்தினேன். ஆனால் அவர் என்னுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

உடனே நான், முதல்-மந்திரி சித்தராமையாவை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார் என்று தெரிவித்தேன். மேலும் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய உங்களால் எதுவும் செய்ய முடியுமா? என்று கேட்டேன். உடனே முதல்-மந்திரி சித்தராமையா கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரையில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்தார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்தனர்.

பிரதமர் மனது வைத்திருந்தால் விவசாயக்கடனை கண்டிப்பாக தள்ளுபடி செய்திருக்க முடியும். ஏழைகளின் நலனில் அவருக்கு அக்கறை இல்லை. அதேபோல் இந்தியாவில் ஆரோக்கியம், கல்வி, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. எல்லைப்பகுதியில் சீனா சுரங்கப்பாதை அமைத்து வருகிறது.

மேலும் விமானப்படை தளம், ஹெலிபேடு, விமான நிலையம் போன்றவற்றையும் அமைத்து வருகிறது. ஆனால் இதை இந்தியா கண்டுகொள்ளவில்லை. இதுதான் பாரதத்தை பாதுகாக்கும் முறையா?. நாட்டை கவனிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

குஜராத்தில் நரேந்திர மோடிதான் ஆட்சி செய்தார். ஆனால் தற்போது அந்த மாநிலத்தில் அனைத்தும் தனியார் மயமாகி விட்டது. கல்வி, சுகாதாரம் இப்படி அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனத்தினர் புகுந்துவிட்டனர். குஜராத் மாநிலத்தில் தனியார் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. நரேந்திர மோடி தனியாரின் நலனுக்காகத்தான் ஆட்சி நடத்துகிறார் என்று நினைக்கிறேன்.

ஊழல் குறித்து பேசும் நரேந்திர மோடி, ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்த எடியூரப்பாவை எப்போதும் தன்னுடன் வைத்திருக்கிறார். இதன்மூலம் ஊழல்வாதிகள் யார் என்று மக்களுக்கே தெரியும்.

பா.ஜனதா ஆட்சி முடிவதற்கு இன்னும் ஒரு ஆண்டுதான் உள்ளது. அதன்பிறகு கண்டிப்பாக பா.ஜனதாவின் ஆட்சி மலராது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். ஆட்சி நடத்த வேண்டும் என்றால் மக்களின் ஆசீர்வாதம் வேண்டும். தான் என்ற ஆணவத்தில் இருக்கும் நரேந்திர மோடிக்கு மக்களின் ஆசி கிடைக்காது.

கர்நாடகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனது பாட்டி இந்திரா காந்தி ஜெயித்த இம்மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் யார் போடியிடுகிறார்களோ? அவர்களை நீங்கள்(மக்கள்) வெற்றிபெறச் செய்ய வேண்டும். அவர்களுக்கு உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மந்திரி ரோஷன் பெய்க், பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மத்திய மந்திரி வீரப்ப மொய்லி உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும், ராகுல் காந்தி பிரசார வாகனம் மூலம் சிக்கமகளூரு, மாகடி, பேளூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று மக்களிடம் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் அவர் பிரசார வாகனத்திலேயே ஹாசன் மாவட்டத்திற்கு சென்றார்.

மேலும் செய்திகள்