மாவட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.6,931 கோடி கடன் வழங்க இலக்கு

மாவட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.6 ஆயிரத்து 931 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

Update: 2018-03-21 21:11 GMT
சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டிற்கு முன்னுரிமை கடன் திட்ட அறிக்கை கையேடு வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விவசாயம் மற்றும் விவசாயம் சாரா தொழில்கள் மேற்கொள்வதற்கு வங்கிகள் மூலம் முன்னுரிமை கடன் வழங்குவதற்காக திட்ட மதிப்பீட்டு கையேட்டினை கலெக்டர் லதா வெளியிட்டு பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விவசாயம், விவசாயம் சார்ந்த துணைத்தொழில்கள் மற்றும் விவசாயம் சாரா தொழில்களுக்கான முன்னுரிமை கடன் வழங்குவதற்கு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு நபார்டு வங்கியின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் 2018-19-ம் ஆண்டிற்கான திட்ட அறிக்கையின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்ட அறிக்கையின் மூலம் 2018-19-ம் நிதியாண்டிற்கு வேளாண்மை பயிர்க்கடன் வழங்குவதற்கு ரூ.1,951 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர விவசாய உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதற்கு ரூ.567 கோடியும், விவசாயம் சார்ந்த துணைத்தொழில்கள் மேற்கொள்வதற்கு ரூ.272 கோடியும் என மொத்தம் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 ஆயிரத்து 401 கோடி வழங்குவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேற்கொள்வதற்கு ரூ.590 கோடியும், ஏற்றுமதி தொழில் செய்வதற்கு ரூ.64 கோடியும், கல்விக்கடன் வழங்குவதற்கு ரூ.563 கோடியும், வீட்டு வசதி கடன் வழங்குவதற்கு ரூ.653 கோடியும், சூரியசக்தி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சூரியசக்தி உற்பத்திச் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு ரூ.8 கோடியே 74 லட்சமும், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக்குழுக்கள் மற்றும் பிரதம மந்திரியின் ஜன்தன் மற்றும் பல்வேறு காப்பீடு திட்டங்கள் மேற்கொள்வதற்கு ரூ.705 கோடியும் மற்றும் இதர சமூக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கு ரூ.105 கோடியும் என மொத்தம் மாவட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டில் ரூ.6 ஆயிரத்து 931 கோடி வங்கிகள் மூலம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ருக்மணி லட்சுமணன், அனைத்து வங்கிகளின் மேலாளர்கள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மகளிர் திட்டம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்