வாலிபரை கொன்றுவிட்டு தப்பி ஓடிய கள்ளக்காதலி கைது

தானேயில், வாலிபரை கொலை செய்து விட்டு தப்பிஓடிய கள்ளக்காதலி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-03-21 20:43 GMT
தானே,

தானே காசர்வடவலி சாய்நாத் நகரில் உள்ள குடிசை வீட்டில் தங்கி இருந்தவர் கபீர் லஸ்கர்(வயது25). கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது ஆண் உறுப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது. சம்பவத்துக்கு முன் அவருடன் பெண் ஒருவர் தங்கியிருந்ததாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கபீர் லஸ்கருடன் தங்கியிருந்த பெண் பெங்களூருவை சேர்ந்த ரூமா பேகம்(25) என்பதும், அவரது கள்ளக்காதலி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெங்களூரு சென்று ரூமா பேகத்தை கைது செய்தனர். பின்னர் அவர் தானே அழைத்து வரப்பட்டார்.

கொலை தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட கபீர் லஸ்கர் கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து  வந்தார். அப்போது கணவருடன் வசித்து வந்த ரூமா பேகத்துடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கபீர் லஸ்கர் அவரை திருமணம் செய்வதாக கூறி தானேக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்து இருக்கிறார். இது ரூமா பேகமுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.

இந்தநிலையில் சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த ரூமா பேகம் கீழே கிடந்த செங்கலை எடுத்து கபீர் லஸ்கரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில், மயங்கி விழுந்த அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராத ரூமா பேகம் அவரது ஆண் உறுப்பையும் துண்டித்து விட்டு, விமானத்தில் ஏறி பெங்களூருவுக்கு தப்பிச் சென்றுள்ளார். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரிய வந்தன.

மேலும் செய்திகள்