குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி விசாரணை

குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்யா மிஸ்ரா நேற்று தனது விசாரணையை தொடங்கினார்.

Update: 2018-03-21 22:00 GMT
தேனி,

போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11-ந்தேதி காட்டுத்தீ பரவியது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில் 17 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் நடக்க எழுந்த சூழ்நிலைகள் பற்றியும், காப்புக்காடு பகுதிகளில் மலையேற்றம் செய்வதற்காக அனுமதி அளிக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் முறைகள் குறித்தும், மலையேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் மலையேற்ற விதிமுறைகளை மீறினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்த தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அதுல்யா மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய அவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முதற்கட்ட விசாரணை நடத்துவதற்காக விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா தேனிக்கு நேற்று வந்தார். பின்னர் மாலை 6.20 மணியளவில் மாவட்ட கலெக் டர் அலுவலகத்துக்கு வந்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், இந்த தீ விபத்து தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தினார். மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மதுரை மண்டல வன பாதுகாவலர் உதயன், மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளிடம் தீ விபத்து குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர், சம்பவ இடத்துக்கு முதலில் சென்ற 108 ஆம்புலன்ஸ் பணியாளர் ஜெகதீசன் உள்பட 3 பேரிடம் விசாரித்து சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இதேபோல், முதலுதவி சிகிச்சை அளிக்க சம்பவ இடத்துக்கு சென்ற தேனியை சேர்ந்த டாக்டர் சி.பி.ராஜ்குமாரிடமும் பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார்.

மாவட்ட வன அலுவலர், வனச்சரக அலுவலர்கள், போடி வன ஊழியர்கள் ஆகியோரிடமும் சம்பவம் குறித்து விசாரித்தார். வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் அவர் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா, சம்பவ இடமான குரங்கணி மலைப்பகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) நேரில் செல்கிறார். காலை 7 மணிக்கு குரங்கணியில் இருந்து ஒத்தமரம் பகுதிக்கு சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் போடி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் அவர் விசாரணை நடத்த உள்ளார். அதிகாரிகள், மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொதுமக்களிடம் அவர் விசாரணை நடத்துகிறார்.

மேலும் செய்திகள்