வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் இலவச திறன் எய்தும் பயிற்சி கலெக்டர் வெங்கடேஷ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.;

Update: 2018-03-21 20:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

இலவச பயிற்சி

தூத்துக்குடி, கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியினை முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பயிற்சி காலம் சுமார் 10 மாதம் ஆகும்.

இதில் எலக்ட்ரீசியன், கியாஸ் வெல்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் இலவச திறன் எய்தும் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் போக்குவரத்து கட்டணமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த பயிற்சியில் 8–ம் வகுப்பு முடித்தவர்களும், அதற்கு மேல் படித்தவர்களும் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியானது வருகிற 2.4.2018 முதல் தொடங்க உள்ளது.

விண்ணப்பம்

இந்த பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பம் கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) வரை வழங்கப்படுகிறது.

பயிற்சிக்கு வரும் போது அசல் கல்வி ஆவணங்களுடன் 8–ம் வகுப்பு முடித்தவர்கள் மதிப்பெண் பட்டியல் அல்லது அதற்கு மேல் படித்த மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ்கள் அசல் மற்றும் ஒரு நகல், 5 புகைப்பட நகல்களுடனும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி, அந்த வங்கி புத்தகத்தின் நகலையும் கொண்டு வர வேண்டும். மேலும் தொடர்புக்கு 0461–2340133 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்