கழிவுநீர் செல்ல சிறுபாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஆரணி அருகே கழிவுநீர் செல்ல சிறுபாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி,
ஆரணி அருகே கழிவுநீர் செல்ல சிறுபாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி அருகே வடுகசாத்து கிராமத்தில் பிராமணர் தெரு, பெரியத் தெரு, கருணீகர் தெரு, குடுமித் தெரு, குடுமி சந்து தெரு ஆகிய தெருக்களில் இருந்து கழிவுநீர் செல்லக்கூடிய ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் வடுகசாத்து ரோட்டை கடக்கும் வகையில் உள்ள கால்வாய் தூர்ந்து விட்டது.
கடந்த 3 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் இல்லாத நிலையில் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். அப்போது நெடுஞ்சாலைத்துறை ரோட்டை தோண்டி கால்வாய் அமைக்க முடியாது, புதிதாக சாலை அமைக்கும்போது சிறு பாலம் அமைத்து சாலை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்கள்.
தற்போது ஆரணியில் இருந்து தச்சூர் வரையிலான தார்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதையடுத்து கிராம மக்கள் பணி செய்பவர்களிடம் கால்வாய் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். அதற்கு ஒப்பந்ததாரர் எங்களுக்கு தார்சாலை அமைப்பதற்கு மட்டுமே பணி வந்துள்ளது. சிறுபாலம் அமைக்க திட்டம் இல்லை என கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆரணி - தேவிகாபுரம் நெடுஞ்சாலை வடுகசாத்து கிராமத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு இ.செந்தில், தாலுகா இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், தாசில்தார் சுப்பிரமணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுசம்பந்தமாக புகார் அளியுங்கள். நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.