சேலம் காஞ்சி சங்கரமடத்தில் மின்விளக்குகள் உடைப்பு திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் 3 பேர் கைது
சேலம் காஞ்சி சங்கரமடத்தில் மின்விளக்குகள் உடைத்ததால் திராவிடர் விடுதலை கழக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
சேலம்,
சேலம் மரவனேரி 7-வது கிராசில் காஞ்சி சங்கரமடம் உள்ளது. இங்குள்ள காமாட்சி அம்மனுக்கு தினமும் பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிள்களில் 3 மர்ம ஆசாமிகள் காஞ்சி சங்கரமடம் முன்பு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கட்டையால் அங்கிருந்த 2 மின்விளக்குகளை உடைத்ததுடன் பேனர்களையும் கிழித்தனர்.
இதை பார்த்த ஊழியர் ஒருவர் சத்தம் போட்டார். அதற்குள் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மின் விளக்குகளை உடைத்ததாக சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த திராவிடர் விடுதலை கழக ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன்(வயது38), நங்கவள்ளி டவுன் தலைவர் ராஜேந்திரன்(37), துணைத்தலைவர் மனோஜ்(30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.