புல்தானாவில் டாக்டர் தற்கொலை நோயாளியுடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்

புல்தானாவில் நோயாளியுடன் ஏற்பட்ட தகராறால் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Update: 2018-03-20 22:59 GMT
நாக்பூர்,

புல்தானா மாவட்டம் சேகாவ் தாலுகா பாங்காவ் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் தீரஜ் பிரகாஷ்(வயது 30). இவர் நேற்று காலை தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறி த்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் அவர் நோயாளி ஒருவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்கொைல செய்துகொண்டதாக கூறியிருந்தார்.

அதாவது முந்தையநாள் இரவு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த நோயாளி ஒருவர், தனக்கு மருந்துகளை டானிக்காக தருமாறு கேட்டுள்ளார். ஆனால் டானிக் காலியாகிவிட்டதால் டாக்டர் தீரஜ் பிரகாஷ் மாத்திரைகள் கொடுத் துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நோயாளி டாக்டருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை அவமரியாதையாக பேசியதாக தெரிகிறது. மனமுடைந்த டாக்டர் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட டாக்டருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. மனைவி தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

நோயாளி திட்டியதால் டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்