பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய கோரி கிள்ளையில், தி.மு.க.வினர் சாலை மறியல்

பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய கோரி கிள்ளையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-20 22:00 GMT
புவனகிரி, 

பெரியார் சிலையை உடைப்போம் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுக்கோட்டை அருகே மர்மநபர்கள் சிலர் பெரியார் சிலையை உடைத்து சேதப் படுத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், சிலையை உடைத்து சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய கோரியும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பெரியார் சிலையை உடைத்த நபர்களை கைது செய்ய கோரியும், பெரியார் சிலையை உடைப்போம் என்று முகநூலில் பதிவிட்ட எச்.ராஜாவை கண்டித்தும் கிள்ளை நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன் தலைமையிலான தி.மு.க.வினர் நேற்று கிள்ளை கடைவீதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட கிள்ளை ரவீந்திரன் உள்பட 40 பேரை கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்