புதுச்சேரியில் துணிகரம்: செங்கல்லால் தாக்கி தொழிலாளி கொலை

புதுவையில் செங்கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2018-03-20 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை சண்முகாபுரம் நெசவாளர் வீதியை சேர்ந்தவர் ரவி (வயது 49), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரளா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். மகள் லாஸ்பேட்டை பாலிடெக்னிக்கில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

ரவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் அவர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டைவிட்டு வெளியே செல்லும் அவர் சில நாட்கள் வீட்டுக்கு வராமலும் இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அவர் வெளியே சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. எப்போதும்போல் எங்காவது போய்விட்டு வருவார் என்று அவரது மனைவியும், மகளும் தேடாமல் இருந்துவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அதே பகுதியில் மாணிக்கசெட்டியார் வீதியில் உள்ள ஒரு மளிகை கடை முன்பு தலையில் ரத்தக்காயத்துடன் ரவி கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் போலீஸ் டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். ரவி பிணமாக கிடந்த கடை அருகே கட்டிட வேலை நடந்து வருகிறது. அங்கிருந்த செங்கல்லை எடுத்து யாரோ அவரை தலையில் தாக்கி கொலை செய்துள்ளனர். குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் யாரேனும் செங்கல்லால் தாக்கினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் கொலையாளியை தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்