மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2018-03-20 23:00 GMT
திருவள்ளூர்,

ராமர் கோவில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிஷத் சார்பில் நடத்தப்படும் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் எஸ்.கே.குமார், தொகுதி செயலாளர் யோகா, செய்தி தொடர்பாளர் திருவரசு, செந்தில், இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர்கள் நீலவானத்து நிலவன், தளபதிசுந்தர், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவரும் மாநில நிர்வாகியுமான ராசகுமார் ஆகியோர் கலந்து கொண்டு திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் உடனடியாக திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் திரளான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையான எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இருபுறமும் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து நின்றன. அப்போது போலீசார் மறியலில் ஈடுபட்ட 130 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

அதே போல பேரம்பாக்கத்தில் கடம்பத்தூர் தெற்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கடம்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈசன் தலைமையில் ஒன்றிய பொருளாளர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் ராஜா, மாவட்ட துணை அமைப்பாளர் புருஷோத்தமன், ஆனந்தன், சார்லஸ், ஷியாம்சுந்தர் என 80 பேர் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மப்பேடு போலீசார் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 80 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர் . மாலையில் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நேசக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் தண்டலம் செல்வன், தொகுதி செயலாளர் ஜெமினி, ஆந்திர மாநில செயலாளர் சாம்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 23 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்