மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் சாலை மறியல்

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து குமரி மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 208 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-03-20 23:00 GMT
நாகர்கோவில்,

விசுவ இந்து பரிஷத் ஆதரவு அமைப்பு சார்பில் ராமராஜ்ய ரதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தொடங்கிய இந்த ரதயாத்திரை பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது தமிழகத்துக்கு வந்துள்ளது. இந்த ரதயாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி தி.மு.க.வினர் நேற்று சட்டசபையில் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட 6 இடங்களில் சாலை மறியல் நடந்தது.

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு காமராஜர் சிலை அருகில் தி.மு.க.வினர் நேற்று மதியம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தி.மு.க. பொருளாளர் கேட்சன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்திற்கு, மாநில மீனவரணி செயலாளர் இரா.பெர்னார்டு முன்னிலை வகித்தார்.

இதில் நிர்வாகிகள் சி.என்.செல்வன், தில்லைச்செல்வம், வக்கீல் மதியழகன், பூதலிங்கம், டேவிட்சன், எம்.ஜே.ராஜன், குமரி மணிமாறன், பெஞ்சமின், வக்கீல் பாலஜனாதிபதி, சதாசிவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ரத யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 35 பேர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் மாலையில் குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி தலைமைதாங்கினார். பொதுசெயலாளர் ஹாஜா முகைதீன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை நேசமணிநகர் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல், குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மணவாளக்குறிச்சி சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் குட்டிராஜன் தலைமைதாங்கினார். இதில் பேரூர் செயலாளர்கள் நிஜாம், தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக குட்டிராஜன் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், ராஜாக்கமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சற்குரு கண்ணன் தலைமையில் ராஜாக்கமங்கலம் சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்தனர்.

குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் சாலை மறியல் நடந்தது. இதில் கலந்து கொண்ட நகர தி.மு.க. செயலாளர் நசீர், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், த.மு.மு.க. பாபுல் உசேன் உள்பட 58 பேர் கைது செய்யப்பட்டனர்.

தக்கலையிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மொத்தம் 208 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். களியாக்காவிளை மற்றும் அருமனையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்