ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த 550 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-03-20 22:45 GMT
தேனி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி அயோத்தியில் தொடங்கிய ராம ராஜ்ய ரத யாத்திரை மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள போன்ற மாநிலங்களில் நடந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் இந்த ரத யாத்திரை திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரை பகுதியில் நேற்று தொடங்கியது.

இந்த ரத யாத்திரைக்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்ப்பு தெரிவித்து மறியல் செய்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். செங்கோட்டையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நேற்று தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க.வினர் மாவட்டத்தில் மொத்தம் 11 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தேனியில் நகர பொறுப்பாளர் முருகேசன் தலைமையில் நேரு சிலை சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்த 54 பேரை போலீசார் கைது செய்தனர். கம்பம் சிக்னல் பகுதியில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மறியல் செய்த 65 பேர் கைது செய்யப்பட்டனர். கோம்பை பஜாரில் மறியல் செய்த பேரூர் செயலாளர் முருகன் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தமபாளையம் புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரன் உள்பட 23 பேரும், பெரியகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மறியல் செய்த நகர செயலாளர் அபுதாகீர் உள்பட 27 பேரும் கைதுசெய்யப்பட்டனர். போடி தேவர் சிலை அருகில் சாலை மறியல் செய்த முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், நகர செயலாளர் செல்வராஜ் உள்பட 80 பேர் கைதாகினர்.

கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நகர செயலாளர் லோகன்துரை தலைமையில் மறியல் செய்த 29 பேரும், பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் மறியல் செய்த தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி மாநில தலைவர் எல்.மூக்கையா உள்பட 80 பேரும் கைது செய்யப்பட்டனர். சின்னமனூரில் மறியல் செய்த 22 பேரும், மார்க்கையன் கோட்டை சந்திப்பு பகுதியில் மறியல் செய்த தி.மு.க.வை சேர்ந்த 17 பேரும், ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை முன்பு மறியல் செய்த தி.மு.க.வினர் 26 பேரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 11 இடங்களில் மறியல் செய்த தி.மு.க.வினர் 443 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் ஈஸ்வரன் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தமபாளையத்தில் மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், இந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட தென்மண்டல செயலாளர் அருந்தமிழரசு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர். கம்பம் சிக்னலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் மறியல் செய்த தி.மு.க.வினர் 443 பேர் உள்பட மொத்தம் 550 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மறியல் நடந்த பகுதிகளில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

அதேபோல், பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்கரையில் பேரூர் செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்டிப்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தேவதானப்பட்டியில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மேலும் செய்திகள்