புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது
விழுப்புரம் அருகே புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று காலை விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் 33 அட்டைப்பெட்டிகளில் 1,584 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் நேரு நகரை சேர்ந்த ராஜா (வயது 38), காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த சின்னப்பையன் (45) என்பதும் புதுச்சேரியில் இருந்து காஞ்சீபுரம் பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ராஜா, சின்னப்பையன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.