அரசு கலைக்கல்லூரியில் வளாக தேர்வு நடத்தப்படும் கலெக்டர் அன்பழகன் தகவல்

தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் வளாக தேர்வு நடத்தப்படும் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2018-03-20 22:30 GMT
கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் வார விழா நேற்று நடந்தது. விழாவில் கலெக்டர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவர்கள் படிக்கும் போது கல்விக்கு அடித்தளமாக இருப்பது பள்ளி பருவம், கல்லூரி பருவம் என 2 பருவங்கள் தான். இதில் கல்லூரி பருவம் வாழ்வில் அடித்தளம் அமைக்கும் மிக முக்கிய பருவமாகும். ஒவ்வொரு நாளும் பணிகளை முடித்த பின் இன்று நாம் என்னசெய்தோம், என்ன கற்றோம் என்று நினைவில் கொள்ள வேண்டும். அதில் ஒன்றும் இல்லையென்றால் அடுத்த நாளை பயனுள்ளதாக மாற்ற முயற்சிக்க வேண்டும். உரிய காலத்தில் உரிய செயல்களை செய்யாமல் தவறவிட்டால் காலம் மீண்டும் திரும்பி வராது.

உங்களுக்காக நீங்கள் உழைக்கும்போது நாளை உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கும். தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் முதன்முதலாக வளாக தேர்வு (கேம்பஸ் இன்டர்வியூ) நடத்தப்பட உள்ளது. அதற்கு தனியார் கல்லூரி மாணவர்களை விட எந்த வகையிலும் அரசு கல்லூரி மாணவர்கள் குறைவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கடுமையாக மாணவர்கள் உழைத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மேலாண்மை பயிற்சி, தொழிலை லாபகரமாக நடத்துவது, தொழில் தொடங்குவதற்கு எந்தெந்த துறைகளில் உரிமம் பெற வேண்டும், உரிமம் மற்றும் வரைபட ஒப்புதல் பெறுதல், சந்தை யுக்தி போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தொழில் முனைவோர் குறித்து விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது. 80 மாணவ- மாணவிகள் பங்கேற்றதில் முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.ஆயிரமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. ரொக்கப் பரிசுகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார். இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமேஷ், அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாண்டியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்