மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம்

ராமேசுவரம், கமுதி பகுதிகளில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-20 22:45 GMT
ராமேசுவரம்,

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் சார்பில் நாடு முழுவதும் ரத யாத்திரை வலம் வருகிறது. உத்தரபிரதேசமாநிலத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரதம் கேரளா சென்று விட்டு தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஸ்டாலின் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், ரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் தி.மு.க. நகர் செயலாளர் நாசர்கான் தலைமையில் அவை தலைவர் சண்முகம், ராமு, ரமேஷ், ஜெகதீஸ்பாண்டியன் உள்பட பலர் திட்டக்குடி சந்திப்பில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், அருண்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர். இந்த ரதம் இன்று (புதன்கிழமை) ராமேசுவரம் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமுதி பஸ் நிலைய பகுதியில் தி.மு.க. சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் 50 பேரும், ஒன்றிய செயலாளர் செந்தூர்பாண்டி தலைமையில் 20 பேரும் மறியல் செய்ய முயன்று கைது செய்யப்பட்டனர். கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு நகர் செயலாளர் பசீர்அகமது தலைமையில் தி.மு.க.வினர் 22 பேரும், திருப்புல்லாணி பஸ் நிலைய பகுதியில் ஒன்றிய செயலாளர் புல்லாணி தலைமையில் தி.மு.க.வினர் 18 பேரும் மறியல் செய்ய முயன்று கைது செய்யப்பட்டனர்.

தொண்டியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நகர் தலைவர் முகமது ஜிப்ரி தலைமையில் 32 பேரும், ஆர்.எஸ்.மங்கலம் பஸ் நிலைய பகுதியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் காந்தி தலைமையில் ஒரு பெண் உள்பட 22 பேரும் மறியல் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டனர். இவ்வாறு மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 5 பெண்கள் உள்பட 595 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்