சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் பலி

சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-03-20 22:00 GMT
சத்தியமங்கலம்,

கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி. இவருடை மகன் கவின் (வயது 21). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையத்தில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார்.

இவருடன் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த புஷ்பராஜ் என்பவரின் மகன் சரண்ராஜ் (வயது 20), குன்னூர் அருகே உள்ள கோகத்துறையை சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன் (20) ஆகியோரும் தங்கி இருந்தனர். கவின் படித்த கல்லூரியில் சரண்ராஜ் பி.எஸ்.சி. 2-வது ஆண்டும், மணிகண்டன் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 3 பேரும் மோட்டார்சைக்கிளில் வெளியில் சென்றுவிட்டு கொமராபாளையத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை சரண்ராஜ் ஓட்டினார். அவருக்கு பின்னால் மற்ற 2 பேரும் உட்கார்ந்திருந்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த தாசரிபாளையம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், படுகாயம் அடைந்த 3 பேர்களையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவின் பரிதாபமாக இறந்தார். சரண்ராஜ், மணிகண்டன் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்