மு.க.ஸ்டாலின் கைது- ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: அரசியல் கட்சியினர் சாலைமறியல்; 146 பேர் கைது

ராமராஜ்ய ரத யாத்திரை மற்றும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைதானதை கண்டித்து மேட்டுப்பாளையம் பகுதியில் அரசியல் கட்சியினர் தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 146 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Update: 2018-03-20 22:45 GMT
மேட்டுப்பாளையம்,

தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்தும், ரத யாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட தலைவர் எம்.அப்துல் ஹக்கீம் தலைமையில் பஸ் நிலையத்தில் இருந்து சிக்ஸ் கார்னர் வரை கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட பொது செயலாளர் நவுபல், செயலாளர் முகமது அலி, துணை தலைவர் சபீக் அகமது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் காஜா மைதீன், செயலாளர் காதர் பாட்ஷா, நகர தலைவர் அஷ்ரப் அலி, எஸ்.டி.டி.யு. மாவட்ட பொறுப்பாளர் ரபீதின் உள்பட 38 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

இதேபோல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சிக்ஸ் கார்னருக்கு சென்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கு மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அஸ்ரப் அலி தலைமை தாங்கினார். இதில் யாசிம், சிராஜுதீன் உள்பட 23 பேரை போலீசார் கைதுசெய்தனர். மேட்டுப்பாளையம் நகர ஒன்றிய தி.மு.க.சார்பில், மு.க.ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பா.அருண்குமார், கலை இலக்கிய பேரவை துணை செயலாளர் உமாபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முக சுந்தரம், ஒன்றிய பொறுப்பாளர்கள் எஸ்.என்.டி.கல்யாணசுந்தரம் (கிழக்கு), எஸ்.சுரேந்திரன் (மேற்கு ), மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அசரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் இவர்கள் பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று சிக்ஸ் கார்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் படுத்தும் மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர்கள் முகமது யூனுஸ், வெங்கடேஷ், உதயகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் டீலக்ஸ் உசேன், புஜகனூர் கந்தசாமி உள்பட 50 பேரை பெரியநாயக்கன்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் போலீசார் கைதுசெய்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சிக்ஸ் கார்னர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் பஸ்நிலைய சந்திப்பில் நகர கழக தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் நகர பொறுப்பாளர் விஷ்வ பிரகாஷ், கூடலுார் நகர செயலாளர் ந.கனகராஜ், தி.மு.க. மாணவர் அணி நிர்வாகி பிரதீப் கந்தசாமி உள்பட 35 பேர் கைதுசெய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 146 பேரை போலீசார் கைதுசெய்தனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்