விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் வன அதிகாரிகள் உள்பட 3 பேரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், மசினகுடி வாழ்வுரிமை இயக்க தலைவர் பேட்டி

10 ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் கவுரவ வன அதிகாரிகள் உள்பட 3 பேரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மசினகுடி வாழ்வுரிமை இயக்க தலைவர் வர்கீஸ் ஊட்டியில் பேட்டி அளித்தார்.

Update: 2018-03-20 22:15 GMT
ஊட்டி,

மசினகுடி மக்கள் உள்பட உல்லத்தி, முதுமலை, ஸ்ரீமதுரை, கடநாடு, கூக்கல் உள்ளிட்ட 10 ஊராட்சிகள், சோலூர், தேவர்சோலை, நடுவட்டம் உள்ளிட்ட 4 பேரூராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் அரசின் தனியார் வன பாதுகாப்பு சட்டம் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து மசினகுடி வாழ்வுரிமை இயக்க தலைவர் வர்கீஸ் நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு கொண்டு வந்த தனியார் வன பாதுகாப்பு சட்டம் மூலம் மசினகுடியில் வாழும் ஏழை விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 10 ஊராட்சிகள், 4 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம், மின் இணைப்பு, கிணறு அமைத்தல் போன்ற பணிகள் செய்ய முடியாமலும், 46 ஆயிரம் ஏக்கர் பட்டா நிலம் வைத்து உள்ள விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தனியார் வன பாதுகாப்பு சட்டத்தை நீக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி நீதிமன்றத்துக்கு சென்று போராடி வந்தோம். ஆனால், சில அரசு சாரா அமைப்புகள் ஏழை மக்களுக்கு எதிராக வனத்தை காப்போம் என்று கூறி எங்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

எனவே, கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட நிலத்தை அங்கீகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று, நிலத்தில் கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும். விவசாய மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அரசு நியமித்த கவுரவ வன அதிகாரிகள் 2 பேர் மற்றும் வனத்துறையின் வக்கீல் ஒருவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அப்போது தான் மசினகுடி பகுதி மக்களுக்கு நியாயம் கிடைக்கும். மசினகுடியில் 6 ஆயிரம் வீடுகளில் 16 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வுக்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அகில இந்திய கிஷான் சங்க தலைவர் நரசிம்மன், முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மொய்தீன், பழங்குடியின சங்க தலைவர் மாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்