மூப்பர்காடு கிராமத்தில் தொடர் அட்டகாசம்: பஸ்சை வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு

மூப்பர்காடு ஆதிவாசி கிராமத்தில் காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-20 21:45 GMT
குன்னூர்,

கொலக்கம்பை மூப்பர்காடு ஆதிவாசி கிராமத்தில் கடந்த சில நாட்களாக 2 குட்டிகளுடன் 7 யானைகள் முகாமிட்டு உள்ளன. யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நின்று இருந்ததால் கடந்த 18-ந் தேதி கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். பின்னர் அதிகாலை நேரத்தில் யானைகள் அங்கிருந்து சென்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் மூப்பர்காடு கிராமத்தை விட்டு அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் யானைகள் இரவு தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்புக்குள் சென்றன. அங்கு யானைகள் வாழை மற்றும் மூங்கில் மரங்களை முறித்து தின்று அட்டகாசம் செய்தன.

அப்போது ஒரு யானை குடியிருப்பு பகுதியில் நின்ற ஒரு மாமரத்தின் கிளையை ஒடித்தது. இதில் எதிர்பாராத விதமாக மின்கம்பியில் யானையின் துதிக்கைபட்டது. யானையின் துதிக்கையில் மின்சாரம் பாய்ந்ததால் வலி தாங்க முடியாமல் பிளிறியது. இதையடுத்து அந்த யானையுடன் மற்ற யானைகள் தொழிலாளர்களின் வீடுகளை சேதப்படுத்தின.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு குன்னூரில் இருந்து அரசு பஸ் ஒன்று மூப்பர்காடு கிராமத்துக்கு சென்று கொண்டு இருந்தது. அப்போது கொய்யா மர வளைவு என்ற இடத்தில் ஒரு காட்டுயானை திடீரென்று வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. யானை சாலையில் நின்று கொண்டு பஸ்சை வழிமறித்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர்.

சிறிது நேரத்தில் மற்றொரு யானை அங்கு வந்தது. இதையடுத்து டிரைவர் அங்கிருந்து பஸ்சை எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது 2 யானைகளும் அந்த பஸ்சை விரட்டியது. இதனால் பயந்த டிரைவர் பஸ்சை பின்பக்கம் எடுத்து சென்று சிறிது தூரம் தள்ளி நிறுத்தினார். சுமார் அரை மணி நேரம் பஸ்சை அங்கிருந்து செல்ல விடாமல் மறித்து நின்ற யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

அப்போது அங்கு இருந்த தனியார் தேயிலை எஸ்டேட் விடுதியின் கண்ணாடியை அடித்து நொறுக்கி பூந்தொட்டிகளையும் சேதப்படுத்தியன. அதன் பின்னர் 2 குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் கூட்டம் ஊஞ்சலாடி கோம்பை என்ற ஆதிவாசி கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. ஆதிவாசி கிராமம் அருகே காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்