நெல்லை மாநகராட்சியில் வரி பாக்கிகளை உடனடியாக செலுத்த வேண்டுகோள்

நெல்லை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி மற்றும் கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரியில்லா இன நிலுவைகளை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Update: 2018-03-20 20:30 GMT
நெல்லை,

நெல்லை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி மற்றும் கடை வாடகை ஆகிய வரி மற்றும் வரியில்லா இன நிலுவைகளை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் குறிப்பாக ஆட்டோ வாகனம் மூலம் அறிவிப்பு செய்தல், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்தல், அதிகமான நிலுவை தொகை வைத்துள்ள நபர்களின் பெயர் பட்டியலை மாநகராட்சி அலுவலக வளாகங்களிலும், மாநகரத்தின் முக்கிய இடங்களில் பிளக்ஸ் போர்டு மூலம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு பின்பும் நிலுவை வரியினங்களை செலுத்த தவறிய நபர்களிடம் இருந்து வரியை வசூலிக்கும் பொருட்டு தெருக்கள் வாரியான நிலுவைதாரர்கள் பெயர் பட்டியலை அந்தந்த தெருக்களில் பிளக்ஸ் போர்டு மூலம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் வரியின நிலுவைகளை செலுத்த தவறும் நபர்களது சொத்துக்களை ஜப்தி செய்யும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி தீவிரமாக நடவடிக்கை எடுக்க உள்ளது.

எனவே நிலுவை வரிவிதிப்புதாரர்கள் இதுபோன்ற சட்டரீதியிலான நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டும், பொதுநலனை கருத்தில் கொண்டும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கிகளை உடனடியாக செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்